ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் மரணம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள் - ஏன்?
அதிபரின் மரணத்தைச் சொந்த நாட்டு மக்களே கொண்டாடியுள்ளனர்.
ஈரான் அதிபர் மரணம்
ஈரான் அதிபர் இப்ரஹிம் ரைசி அஜர்பைஜான் சென்றுவிட்டு திரும்பினார். அப்போது, ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மலையில் மோதியது.
இதில், இப்ரஹிம் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். அவரது மறைவை தொடர்ந்து உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இப்ராஹிம் ரைசி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெஹ்ரான் மற்றும் மஷாத் நகரின் முக்கிய சதுக்கங்களில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடினர். ஆனால் மறுபுறம், பல ஆயிரம்ஈரானியர்கள் இந்த செய்தியைக் கொண்டாடினர். அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
கொண்டாடிய மக்கள்
சில இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொண்டாட்டம் ஏனென்றால், 1988இல் ஈரான்- ஈராக் போருக்குப் பின் அரசியல் கைதிகள் பலர் தூக்கிலிடப்பட்டதில் இவருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. சுமார் 5000 கைதிகளின் மரண தண்டனைக்கு இவர் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
இவரது ஆட்சியில் தான் கடந்த 2022 ஈரான் நாட்டில் மஹ்ஸா அமினி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று அந்நாட்டின் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்டார்.
இதைக் கண்டித்து மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்த நிலையில், பல நூறு பேர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.