'தன்பாலின உறவுக்கு மறுப்பு' - இளைஞரை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சித்த வைத்தியர்!
இளைஞரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டுக்குள் புதைத்த சித்த வைத்தியரை போலீஸார் கைது செதுள்ளனர்.
இளைஞர் கொலை
கும்பகோணம் அருகேயுள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (27). சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவர் தீபாவளிக்கு ஊருக்கு வந்துள்ளார். பின்னர் கடந்த 13ம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாக தனது பாட்டியிடம் கூறிவிட்டு அசோக்ராஜன் புறப்பட்டுள்ளார்.
ஆனால் அதன் பிறகு அசோக்ராஜனிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. அவரது பாட்டி செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இதனால் கடந்த 15ம் தேதி சோழபுரம் காவல் நிலையத்தில் பாட்டி புகார் அளித்துள்ளார். இது குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தியிடம் (47) அகோக்ராஜன் பழகியிருப்பதால், அவரிடம் கேட்டிருக்கின்றனர்.
அப்போது அவர் 'தனக்கு பாலியல் ரீதியாகக் குறைபாடு இருக்கிறது. அதனால் எனக்கு வாழப் பிடிக்கவில்லை என என்னிடம் அழுதுகொண்டே கூறினான். நான் தஞ்சாவூரிலுள்ள மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுக்க அசோக்ராஜானை வலியுறுத்தினேன்’ என்று கூறியுள்ளார்.
சித்த வைத்தியர் கைது
இதற்கு அடுத்த நாள் அசோக்ராஜன் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் 'எனக்குச் சில குறைபாடுகள் இருப்பதால் வாழப் பிடிக்கவில்லை’ என அசோக்ராஜன் எழுதி அனுப்பியதுபோல் இருந்தது. ஆனால் இது அவரின் கையெழுத்து இல்லை என அசோக்ராஜானின் பாட்டி உள்ளிட்டோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகத்திற்கு உள்ளான கேசவ மூர்த்தியை அழைத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரணை செய்துள்ளனர். அதில் அவர், அசோக்ராஜனைக் கொலை செய்து வீட்டுக்குள் புதைத்து விட்டதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். மேலும், கொலைக்கான காரணமாக "அசோக்ராஜனுடன் நான் தன்பாலின உறவு வைத்துக்கொண்டேன். கடந்த 13ம் தேதி என் வீட்டுக்கு வந்தபோது மது போதையிலிருந்தார். அப்போது தன்பாலின உறவுக்கு அழைத்தேன். ஆனால் அவர் மறுத்தார். அப்போது அவருக்கு நீண்ட நேரப் பாலியல் உறவுகொள்ள வீரியம் மிக்க மருந்து ஒன்றை கொடுத்தேன்.
மது போதையிலிருந்த அவரது உடல் அந்த மருந்தை ஏற்றுக்கொள்ளததால் இறந்துவிட்டார். இதையடுத்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி என் வீட்டுக்குப் பின்புறம் உள்ள கழிப்பறைக்குள் குழி தோண்டி புதைத்துவிட்டேன்” என கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து கேசவமூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.