'வேலியே பயிரை மேய்ந்த கதை' - புகாரளிக்க வந்த சிறுமியை மிரட்டி சீரழித்த சப்-இன்ஸ்பெக்டர்!

Tamil nadu Sexual harassment Crime Dharmapuri
By Jiyath Nov 20, 2023 06:24 AM GMT
Report

புகாரளிக்க சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது

பாலியல் தொடர்பு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம், சிங்கிலி மேடுவை சேர்ந்தவர் பழனிச்சாமி (28). இவருக்கும் ஓசூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்த சிறுமிக்கும், அவரது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் (55), விசாரணையின் போது சிறுமியின் தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர் அந்த சிறுமையை, சகாதேவன் முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டி பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரியவந்துள்ளது.

உதவி ஆய்வாளர் கைது

இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதை அடுத்து, கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக சிறுமி உதவி மையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

காப்பகத்திலிருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் சிறுமி அளித்துள்ள புகாரில் "ஏரியூர் காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன், தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார்" என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

அங்கு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மன்மத லீலையில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவனை ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.