அமைச்சரவை பங்கீடு - கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள்
அமைச்சரவை ஒதுக்கீட்டில் அஜித் பவார் கட்சியை தொடர்ந்து சிவசேனாவும் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
புதிய அமைச்சரவை
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இதில் பாஜகவை சேர்ந்த 61 பேரும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேரும் பதவி ஏற்றனர். தங்களுக்கு அதிக பதவி மற்றும் கேபினட் வேண்டுமென்று கூட்டணி கட்சிகள் வரிசையாக அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு
அஜித்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி கொடுப்பதாக பா.ஜ.க தெரிவித்து இருந்தது. பிரபுல் படேலை அமைச்சராக்க தேசிய வாத காங்கிரஸ் திட்டமிட்டுருந்தது.
ஆனால் அவர் ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்ததால் தற்பொழுதும் கேபினட் பதவி தான் வேண்டும் என்று கூறி பாஜக வழங்கிய பதவியை தேசியவாத காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. 4 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
சிவசேனா எதிர்ப்பு
தற்போது , மத்திய அமைச்சரவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கேபினட் அமைச்சர் மற்றும் இரண்டு இணை அமைச்சர் பதவிகளை அக்கட்சி கேட்டது.
"7 எம்.பி.க்கள் வைத்துள்ள சிவசேனாவுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி மட்டும் வழங்குவது ஏற்புடையது அல்ல" என அக்கட்சி எம்.பி. ஸ்ரீரங் பார்னே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
2 எம்.பி.க்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது, ஒரே ஒரு எம்.பி.யாக உள்ள ஜிதன் ராம் மஞ்சி கேபினட் அமைச்சராக பதவி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் 7 எம்.பி வைத்துள்ள எங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சர் பதவியை என ஷிண்டே சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலாகா ஒதுக்கீடு
அஜித் பவார் கட்சியை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி மட்டுமின்றி இலாகா ஒதுக்கீடு தொடர்பாகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. அமைச்சரவை பதவியேற்று 24 மணி நேரம் ஆக உள்ள நிலையில் தற்போது வரை இலாகா ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.
விவசாய துறை போன்ற முக்கிய துறைகளை தங்களுக்கு தான் ஒதுக்க வேண்டுமென பல கூட்டணி கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளது. தற்பொழுது நடந்து வரும் அமைச்சரவையில் இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.