நடிகை சித்ரா தற்கொலை வழக்கு : ஹேம்நாத் நிரபராதி எனத் தீர்ப்பு - நீதிமன்றம் அதிரடி!
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் நிரபராதி எனத் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நடிகை சித்ரா
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை பூந்தமல்லி நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சித்ராவின் தந்தை காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்தார்.
தீர்ப்பு
இந்த சூழலில் தான், கடந்த 25ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் ஹேம்நாத் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்.
ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ரேவதி முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி எனவும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி தீர்ப்பளித்தார்.