செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு - கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.
செந்தில் பாலாஜி
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அடுத்த சில நாட்களில் மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் மற்றும் அமலாக்கத் துறையினர் மனுதாக்கல் செய்தனர்.
வழக்கு முடிவு
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்று கேள்வி எழுப்பியது. இதற்கிடையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இவருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், எனவே வழக்கை முடித்துவைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அவர் எந்த பதவியிலும் வகிக்கக்கூடாது.
குறிப்பாக அரசாங்க பதவி வகிக்கக்கூடாது என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. ஆகையால் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை. ஆகவே செந்தில் பாலாஜி ஜாமினுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கிறோம்'' என தீர்ப்பளித்துள்ளனர்.