இதை பிரேமலதா விஜயகாந்த் நிறுத்திக்கொள்ள வேண்டும் - செல்வப்பெருந்தகை!
காங்கிரஸ் மீது அவதூறு பரப்புவதை பிரேமலதா விஜயகாந்த் தவிர்க்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இதுகுறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "விஜய பிரபாகரன் தோற்கவில்லை. திட்டமிட்டு சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13-வது சுற்று வரை விஜயபிரபாகரன் முன்னிலையில் இருந்தார்.
செல்வப்பெருந்தகை
அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது" என குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை "விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு மையத்தில் 24 மணி நேரமும் சிசிடிவி வைத்து கண்காணிக்கப்பட்டு உள்ளது. அங்கு எந்த தவறும் நடக்கவில்லை. சந்தேகம் இருந்திருந்தால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு இருக்கலாம்.
ஆனால், இரவெல்லாம் யோசித்து விட்டு சென்னைக்கு வந்தவுடன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காங்கிரஸ் மீது அவதூறு பரப்புவதை தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.