அம்பயர் செய்த தில்லுமுல்லு - இஷான் கிஷானை வறுத்தெடுத்த சேவாக்
மும்பை இந்தியன்ஸ் விவகாரம் குறித்து சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.
இஷான் கிஷான் செயல்
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது.
இதில் இஷான் கிஷான் நடுவர் அவுட் தருவதற்கு முன்பாகவே வெளியேறி சென்றது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆனால் ரீப்ளேவில் பார்க்கும் பொழுது அது அவுட் இல்லை என தெரிந்தது. எதிரணிக்கு ரிவ்யூ இருக்கும் காலகட்டத்தில் இஷான் கிஷான் செய்தது பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.
சேவாக் விமர்சனம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக், “பல சமயங்களில் அப்படியான நேரத்தில் மனம் வேலை செய்ய தவறுகிறது. நீங்கள் அப்படியான நேரத்தில் குறைந்தபட்சம் நடுவர் முடிவை அறிவிக்கும் வரை காத்திருங்கள். நடுவரும் தான் வேலை செய்வதற்கு பணம் வாங்குகிறார்.
அவரும் தன்னுடைய வேலையை செய்யட்டும். இந்த நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை எட்ஜ் எடுத்திருந்தால், அப்போது வெளியேறி இருப்பது விளையாட்டு உத்வேகமாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் கிடையாது. நடுவருக்கும் அந்த நேரத்தில் அது உறுதியாக தெரியவில்லை.
அணி இக்கட்டான நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் வெளியேறி விட்டீர்கள். ரிக்கி பாண்டிங் இது பற்றி எப்பொழுதும் என்ன சொல்வார் என்றால் என்னுடைய வேலை பேட்டிங் செய்வது; நடுவருடைய வேலை அவுட்டா இல்லையா என்று தீர்மானிப்பது என்பார். எனவே அதை நடுவர் கையிலேயே விட்டுவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.