சம்மனை படிக்க நான் தான் கிழிக்கச் சொன்னேன் - சீமான் மனைவி கயல்விழி!
படித்துப் பார்ப்பதற்காக சம்மனை நான் தான் கிழிக்கச் சொன்னேன் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.
சீமான்
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று நேற்று அவரது வீட்டின் கதவில் சம்மன் ஒட்டப்பட்டது.ஆனால் சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் கிழிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்த விசாரணைக்குச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த காவலாளி ஒருவர் காவல்துறையினரிடம் வாக்குவாதம் நடத்தி மோதலில் ஈடுபட்டார்.மேலும் துப்பாக்கியை வைத்து மிரட்டியதால், அவரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக பிடித்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சீமானின் மனைவி கயல்விழி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசியவர் படித்துப் பார்ப்பதற்காகச் சம்மனை நான் தான் கிழிக்கச் சொன்னேன். சுவரில் ஒட்டாமல் வீட்டிலிருந்தவர்களின் கையில் கொடுத்திருக்கலாம் என்று கூறினார்.
கயல்விழி
பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார்.மேலும் காவலாளி மற்றும் சீமான் ஆதரவாளரைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாகவும் கயல்விழி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து காவல் ஆய்வாளர் பிரவீன் திட்டமிட்டு 2 பேரைக் கைது செய்ததாகக் கூறிய கயல்விழி, எங்களை மனரீதியாகத் துன்புறுத்த காவல்துறை திட்டமிட்டு இதனைச் செய்துள்ளது.இது தொடர்பாக, நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் தெரிவித்தார்.