ஆஜராக முடியாது; என்ன செய்வீர்கள்? அசிங்கப்படுவது யாரு - சவால் விட்ட சீமான்!
என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, திமுக அசிங்கப்படுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார்
நடிகை விஜயலட்சுமி அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வளசரவாக்கம் காவல்துறை தரப்பில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் கதவில் சம்மன் ஒட்டப்பட்டது.
இந்த சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் கிழிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸார் இதுகுறித்த விசாரணைக்கு சென்றபோது அங்கிருந்த காவலாளி ஒருவர் காவல்துறையினரிடம் மோதலில் ஈடுபட்டார். அப்போது துப்பாக்கி இருப்பதாக மிரட்டியதால், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் விளக்கம்
இந்நிலையில், சீமான் ஒசூரில் நாதக கலந்தாய்வு கூட்டத்தில் இருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் கிருஷ்ணகிரியில் இருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். பிறகு ஏன் என் வீட்டில் சம்மன் ஒட்டுகிறார்கள்? சேட்டைதானே.. என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன?
இந்த அரசு வேறு எந்த விஷயத்திலாவது இப்படி நடவடிக்கை எடுத்துள்ளதா? நான் விசாரணைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். ஏற்கனவே விசாரணைக்கு வந்து பதில் அளித்திருக்கிறேன். நான் ஒன்றும் பயந்து ஓடி ஒளியும் கோழையல்ல. இதனால் நான் அசிங்கப்படுவேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நீங்கள் அசிங்கப்படுகிறீர்களா?
நாளையே வர வேண்டும் என்கிறார்கள். என்னால் வர முடியாது. மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி மக்களுக்கு சொல்ல வருவது என்ன? என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கு நான் போட்டதுதான். திமுக ஆட்சிக்கு வரும் போது இந்த வழக்குகள் வரும். தேர்தல் வரும் போது இப்படி வழக்கு கொண்டு வருவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.