கள்ளச்சாராய படுகொலை; அதிகாரிகள் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை - சீமான் கேள்வி

M K Stalin Seeman Kallakurichi School Death Kallakurichi
By Karthikraja Jun 20, 2024 10:15 AM GMT
Report

 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது 36 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள விசயம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

kallakurichi liquor death

இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு கள்ளக்குறிச்சி சென்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கபட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் தங்கள் கட்சி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளனர். 

அரசின் அலட்சியமே காரணம் - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கண்டனம்

அரசின் அலட்சியமே காரணம் - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கண்டனம்

சீமான்

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? என கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும் , கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டி தொடர்ந்து அதிகரித்துவருவது ஆற்றமுடியாத மனத்துயரத்தையும், கவலையையும் அளிக்கிறது. 

seeman kallakurichi

‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் அளவிற்கு மிகமோசமான சூழல் நிலவும் நிலையில், உயிரிழப்புகளுக்குக் கள்ளச்சாராயம் காரணம் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது எப்படி? திமுக அரசு சிறிதும் மனச்சான்று இன்றி, வெவ்வேறு உடல் உபாதைகளாலேயே உயிரிழப்புகள் நிகழ்ந்தது என்றுகூறி, கள்ளச்சாராய மரணங்களை மூடி மறைக்க முயன்றது வெட்கக்கேடானது.

குற்றவழக்குகள்

கள்ளச்சாராய விற்பனையின் முக்கியக் குற்றவாளியான சின்னதுரை மீது இதுவரை 70க்கும் மேல் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்க அவர் அனுமதிக்கப்பட்டது எப்படி? அப்பகுதியில் காவல்துறையால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1000 லிட்டர் அளவிற்கு கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்ட நிலையில், இத்தனை நாட்கள் தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது? 

கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினரின் ஆதிக்கம் காரணமாகவே காவல்துறையினரால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதும், பொதுமக்கள் அதுகுறித்து புகார் தெரிவிக்கவே அச்சப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தண்டித்துள்ள திமுக அரசு, அவர்களை நிர்வகிக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை அளிக்க உள்ளது?

சிபிசிஐடி

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையால் கண்டறிந்து தடுக்க முடியாத கள்ளச்சாராய விற்பனையையும், மரணங்களையும் அதே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குற்றப்புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) மூலம் விசாரித்து தடுக்க முடியும் என்பது வேடிக்கையானதாகும். கடந்த ஆண்டு விழுப்புரம் எக்கியார்குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரிக்க திமுக அரசு நியமித்த சிபிசிஐடி விசாரணை என்னானது? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதன் பிறகும் தற்போது மீண்டும் கள்ளச்சாராயத்தால் இத்தனை உயிர்கள் பலியாகிறது என்றால் சிபிசிஐடி விசாரணை என்பதே மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்க மேற்கொள்ளப்படும் ஒரு கண் துடைப்பு நாடகம் என்பது தெளிவாகிறது.

ஆகவே, காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டுமென்றும், இனியும் இதுபோன்று மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.