அரசின் அலட்சியமே காரணம் - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கண்டனம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது 35 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள விசயம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு கள்ளக்குறிச்சி சென்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்ல உள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
விஜய்
தற்போது இது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
— TVK Vijay (@tvkvijayhq) June 20, 2024
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.