சிறையில் உயிருக்கு ஆபத்து; சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் தேவையே இல்லை - சீமான் கொந்தளிப்பு!
சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் தேவையற்றது என சீமான் கொந்தளித்துள்ளார்.
சவுக்கு சங்கர் கைது
காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது. காவல்துறையினர் குறித்தான அவரது கருத்துகளுக்காக,
ஏற்கனவே இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாய்ச்சப்பட்டிருக்கும் குண்டர் தடுப்புக்காவல் சட்டமென்பது தேவையற்றதாகும். இது அவரை ஓர் ஆண்டு சிறையிலேயே முடக்கும் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டதாகும்.
சீமான் காட்டம்
கோவை மத்திய சிறைக்குள் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்தோடு முழுமையாக முரண்படும் அதேவேளையில் சிறைக்குள் அவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் உண்மையாக இருப்பின் அதை கடுமையாக எதிர்ப்பது நம் கடமையாகும்.
அதனை ஒருபோதும் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ முடியாது. சவுக்கு சங்கர் மீது பாய்ச்சப்பட்ட குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற்று, இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும்,
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதான தொடர் ஒடுக்குமுறையை கைவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.