சவுக்கு சங்கர் பேசியது தப்பு தான்..ஆனால் பழிவாங்க நடவடிக்கை கூடாது - தமிழிசை கருத்து!
சவுக்கு சங்கர் பேசியது தவறுதான். ஆனால் பழிவாங்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழிசை பேசியுள்ளார்.
சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது புகார்கள் எழுந்தன.அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, சவுக்கு சங்கரின் காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், சென்னை மதுரவாயிலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழிசை கருத்து
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை இது குறித்து பேசியிருந்தார். அப்போது, “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் 8 நாட்களாக துப்பு துலங்கவில்லை. ஆனால் சவுக்கு சங்கரை மட்டும் கைது செய்தது எப்படி? சவுக்கு சங்கர் பேசியது தவறுதான்.
ஆனால் பழிவாங்குவதற்காக நடவடிக்கை எடுக்கக்கூடாது. கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யும்போது கஞ்சா கடத்தல்காரரை வைத்திருந்தவர்களை என்ன செய்வது? பிரதமர் மோடி தமிழர்களுக்கு அங்கீகாரம் அளித்ததற்கு, விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்ததே சான்று.
சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க திமுக ஆட்சியில் எதுவும் இல்லை. இந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சி செயலற்ற ஆட்சி மட்டுமே. பிரதமர் மோடி ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளார். ஆகவே 3-வது முறையாக அவர் பிரதமராவார்” இவ்வாறு கூறியுள்ளார்.