சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் - நீதிமன்ற காவலுக்கு மறுப்பு!
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.
சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது புகார்கள் எழுந்தன.
அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, சவுக்கு சங்கரின் காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், சென்னை மதுரவாயிலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற காவல்
இந்நிலையில், ரூ. 2 லட்சம் பணம், கஞ்சா அடங்கிய 4 சிகிரெட்டுகள், கார், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர். மேலும், இரு வழக்குகளில் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க போதுமான காரணங்கள் இல்லை எனக்கூறி போலீசாரின் கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்தார்.
இனிமேல் யூடியூப்பில் தவறான தகவல்களை வெளியிட மாட்டேன் என சவுக்கு சங்கர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, சி.எம்.டி.ஏ. சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் வருகிற 24-ந்தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.