பிளாஸ்டிக் பைப்பில் - சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து - கதறும் வழக்கறிஞர்
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் கைது
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது புகார்கள் எழுந்தன.
கோவை சைபர் கிரைம் போலீசார் இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், தேனியில் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு, சிறையில் அடைக்கப்பட்ட போது, சவுக்கு சங்கரின் வாயில் மட்டும் சிறிது காயம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அவரின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக அவரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
உயிருக்கு ஆபத்து
இது தொடர்பாக பேசிய சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாகிருஷ்ணன், சவுக்கு சங்கரை சனிக்கிழமை இரவு 10'ற்கும் மேற்பட்ட காவலர்கள் பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி பலமாக தாக்கி உள்ளனர் என் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதன் காரணமாக அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருப்பதாக குறிப்பிட்டு, வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாவும் தெரிவித்தார்.
கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டிய கோபாலகிருஷ்ணன், சவுக்கு சங்கரை பழி வாங்கும் நோக்கில் கடலூரில் சிறை கண்காணிப்பாளராக இருந்த செந்தில் குமார் தற்போது கோவை சிறை கண்காணிப்பாளராக இருக்கும் காரணத்தால் தான் கோவையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சவுக்கு சங்கருக்கு அனுமதி வழங்க வேண்டும், அவரை நீதிபதி நேரில் பார்க்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்.