பள்ளிக்குள் பயங்கர தாக்குதல் ; முகத்தில் ரத்தம் வழிய கதறும் மாணவி - பதைபதைக்கும் காட்சி!
பள்ளியில் மாணவர்களிடையே நடந்த மோதலில் மாணவி காயங்களுடன் கதறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பள்ளி தாக்குதல்
டெல்லியில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் சர்வோதயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. டெல்லியின் குலாபி பாக் பகுதியில் இந்த பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாகவே மோதல்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தது.
குறிப்பாக பிளேடு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு ரத்தக்காயம் ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில், ஏற்பட்ட மோதலில் பதிவான வீடியோ காட்சி ஒன்று எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டது.
கதறும் மாணவி
அதில், மாணவி ஒருவர் பிளேடு மற்றும் கத்தியால் வெட்டப்பட்டு முகத்தில் ரத்தக் காயத்துடன் நிற்பதும் அவரை சுற்றிலும் சக மாணவ - மாணவிகள் அதிர்ச்சியுடன் நிற்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. மேலும், காயமுற்ற அந்த மாணவி ரத்தம் வழியும் முகத்தோடு நின்று கதறுவது இடம் பெற்றுள்ளது.
இந்த பதிவில் டெல்லி போலீசாரை டேக் செய்துள்ளார் பதிவாளர். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இப்போது வைரலாக பரவும் இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.