சவுக்கு சங்கருக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.10,000 இழப்பீடு? அரசுக்கு நீதிபதி கேள்வி!
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என முடிவானால், அவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்த பின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தமிழக அரசு ரூ.10,000 இழப்பீடு வழங்குமா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 12-ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, சவுக்கு சங்கர் தாய் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
நீதிபதி உத்தரவு
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜரானார். அவர், இந்த வழக்கு கடந்த 4- ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் அமர்விற்கு வழக்கை மீண்டும் அனுப்ப வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயச்சந்திரன், "சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாமல் ஒத்துழைக்க மறுக்கிறது. தனி தனிநபர்களின் சுதந்திரம் முக்கியமானது. சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என முடிவானால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்த பின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தமிழக அரசு ரூ.10,000 இழப்பீடு வழங்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து சவுக்கு சங்கர் தாய் தரப்பில், இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவது அவசியமில்லை என்றும் அது நீதித்துறை நேரத்தை வீணடிக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2.15 மணிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.