திமுக-காரனுக்கு அவ்வளவு கோவமா; என் மேல கை வச்சு பாருங்க - அண்ணாமலை சவால்!
ஆட்டை வெட்டுவதை விட்டுவிட்டு என் மீது கை வையுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
இதனிடையே அண்ணாமலை புகைப்படத்துடன் ஆடு ஒன்றை நடுரோட்டில் மர்ம நபர்கள் பலியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை "ஆட்டைக் கொண்டு வந்து நடு வழியில் வெட்டுவது, அதை கொடூரமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது போன்ற செயல்களை செய்யாதீர்கள்.
கை வையுங்கள்
அப்படி வெட்டுவதாக இருந்தால் என் மீது கை வையுங்கள். திமுக-காரனுக்கு அவ்வளவு கோவம் இருந்தால் தயவு செய்து வாய்பேசாத ஆட்டை விட்டுவிட்டு, நான் கோயம்பத்தூரில் தான் இருக்கப்போகிறேன். இதுதான் என்னுடைய ஊர், இங்கு கரூர் பக்கத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
நான் எங்கு இருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுக தொண்டனுக்கு என் மீது அப்படிப்பட்ட கோவம் இருந்தால், அண்ணாமலை மீது கைவைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் என் மேல் வையுங்கள். நான் இங்குதான் இருக்கப்போகிறேன். அந்த அப்பாவி ஆட்டை விட்டுவிடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.