எகிறி அடித்த திமுக - சவால் விட்ட அண்ணாமலை கோவையில் தோல்வி!
கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வியடைந்துள்ளார்.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது. இந்த தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார்,
அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாதக சார்பில் கலாமணி ஆகியோர் களம் கண்டனர். வாக்கு எண்ணிக்கையில் முதலில் ஓரிரு சுற்றுகளில் அண்ணாமலை முன்னிலை பெற்று வந்த நிலையில், அடுத்ததாக திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெறத் தொடங்கினார். இந்நிலையில் கிட்டத்தட்ட 1,13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியடைந்துள்ளார்.
கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,12,534 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 3,99,354 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,12,178 வாக்குகளும், நாதக வேட்பாளர் கலாமணி 62,130 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அண்ணாமலை சவால்
இந்நிலையில் திராவிட கட்சிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மதுரையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசும் அண்ணாமலை "ஐயா இன்னைக்கு நான் சொல்றேன்.
குறிச்சி வச்சுக்கோங்க. நானும் எங்கேயும் செல்ல மாட்டேன். நீங்களும் எங்கேயும் செல்ல மாட்டீர்கள். லோக்சபா தேர்தலுக்கு பின் தென் மண்டலத்தில் ஒரு திராவிட கட்சியும் இருக்காது. திமுக இருக்காது. தேர்தல் முடிந்த பின் கேளுங்கள். நானும் எங்கேயும் செல்ல மாட்டேன். நீங்களும் எங்கேயும் செல்ல மாட்டீர்கள். நான் சும்மா சொல்லவில்லை. குறிச்சி வச்சுக்கோங்க. அரசியல் களத்தை நன்றாக ஆராய்ந்து சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்" என்று பேசியிருந்தார்.
அதேபோல் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய அண்ணாமலை "நான் சொல்கிறேன் உறுதியாக சொல்கிறேன். பாஜக 25 சதவிகித வாக்குகளை வெல்லும். நான் ஒரு மாநில தலைவர். இது தேசிய ஊடகம். லைவில் பேசிக்கொண்டு இருக்கின்றேன். சும்மா சொல்லவில்லை. நான் பேசுவது ரெக்கார்ட் ஆகும். நான் போகிற போக்கில் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது. நாங்கள் 25 சதவிகிதம் வாக்குகள் எடுப்போம்.
500 சதவிகித வளர்ச்சி. நான் சொல்வதை நீங்கள் தேர்தலுக்கு பிறகு உணர்வீர்கள்" என்று தெரிவித்திருந்தார். இதனை வைத்து தற்போது அரசியல் விமர்சகர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர்.