தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லை - பரபரப்பை கிளப்பும் சமந்தா
தெலுங்கு திரையுலகில் நடைபெறும் பாலியல் தொல்லை தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டுமென சமந்தா கோரிக்கை வைத்துள்ளார்.
ஹேமா ஆணையம்
மலையாள சினிமா துறையில் நடைபெற்று வரும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா ஆணைய அறிக்கை வெளியாகி மலையாள திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மலையாள திரையுலகை சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நடிகைகள் வெளிப்படையாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
சமந்தா
தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளரும், நடிகருமான விஷாலிடம் இது குறித்து கேட்ட போது, தமிழ் சினிமாவிலும் காலங்காலமாக பாலியல் குற்றச்சாட்டு இருந்து கொண்டுதான் உள்ளது. ஹேமா ஆணையம் போல் தமிழ் சினிமா துறையிலும் வரும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைக்கப்படும் என பேசினார்.
இந்நிலையில் பிரபல நடிகையான சமந்தா தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் வுமன் இன் கலக்ட்டிவ் சினிமா அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம்.
இதே போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது. கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்" என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த கோரிக்கை தெலுங்கு சினிமாவில் புயலை கிளப்பியுள்ளது.