உப்புமா கம்பெனிகளால் பாலியல் தொல்லை; ஸ்ரீரெட்டி செய்த சேட்டைதான் தெரியும் - விஷால்
தமிழ் சினிமாவிலும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால்
நடிகர் விஷால் தனது 48வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு காலை உணவினை வழங்கி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது பேசிய அவர், மலையாள திரையுலகில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திய ஹேமா கமிஷன் போல தமிழ் திரையுலகிலும் விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும். தமிழ் திரையுலகில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை.
உப்புமா கம்பெனிகள்
ஆனால் நடிகைகள் யாராவது புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். 20% பேருக்குதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்கு செல்கிறார்கள்? அவர்கள் சொல்வது உண்மையா? திரைப்படம் எடுக்கிறவர்களா? என்பது குறித்து சுதாரிப்பு கொள்ள வேண்டும்.
உப்புமா கம்பெனிகள் ஒரு ஆபிஸ் போட்டு போட்டோ ஷூட் எடுத்து பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை.பெண்ணுக்கு தைரியம் வேண்டும். அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். யாராக இருந்தாலும், பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும். தமிழ் சினிமாவிலும், காலம் காலமாக குற்றச்சாட்டு இருந்து கொண்டு தான் உள்ளது என பேசினார்.
ஸ்ரீரெட்டி
தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் குறித்த கேள்விக்கு, “ஸ்ட்ரைக் செய்து என்ன செய்யப் போகிறீர்கள்? அதனால் என்ன பயன். பணம் இருக்கிறவர்கள் படம் எடுப்பார்கள். எல்லா தயாரிப்பாளர்களும் விமானம் பிடித்து மும்பைக்கு சென்று அமேசான், நெட்பிலிப்ஸ் நிறுவனத்திடம் பேசி முடிவெடுங்கள். என் மீதான குற்றச்சாட்டுக்கோ, தனுஷ் மீதான குற்றச்சாட்டுக்கோ இதுவரை நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் வரவில்லை. என கூறினார்.
நடிகை ஸ்ரீரெட்டி என்பவர் உங்கள் மீது புகார் கொடுத்துள்ளார் என்ற கேள்விக்கு, "ஸ்ரீரெட்டி யார் என்பதே எனக்கு தெரியாது. அவர் செய்த சேட்டைதான் எனக்கு தெரியும். யார் மீது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம். என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேண்டும்" என பதிலளித்தார்.