12 இரட்டைப் படுக்கையறைகள்; ஆனால் 1 குளியலறைதான் - உப்பு மாளிகை, எங்குள்ளது தெரியுமா?
உலகின் முதல் உப்பு விடுதி குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
'சாலர் டி உயினி'
பொலிவியா நாட்டில் 'சாலர் டி உயினி' (Salar de Uyuni) என்னும் உலகின் பெரிய உப்புப்படுகை அமைந்துள்ளது. தலை நகரான லா பாசில் இருந்து 350 கி.மீ. (220 மைல்) தொலைவில் உள்ளது.
உப்புப்படுகையில், உப்புப் பாளங்களைக் கொண்டு கட்டப்பட்ட முதல் உப்பு விடுதி இதுதான். ’உப்பு மாளிகை’ (Palacio de Sal) என்று அழைக்கப்படும் இந்த உணவு விடுதி, டான் ஜுவான் க்வீசடா என்ற கட்டுமான வல்லுநரால் கட்டப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் இந்த விடுதிக் கட்டிடத்தில் ஏற்படும் சில சேதங்கள், மழைக்காலம் முடிந்த பின்பு மறுசீரமைக்கப்படுகிறது. 10,582 சதுர கி.மீ (4,086 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதனை ஒளிப்படம் எடுப்பதற்காகவே, உலகம் முழுவதுமிருந்து பல ஒளிப்படக்கலைஞர்கள் இப்பகுதிக்குச் சுற்றுலா வந்து செல்கின்றனர்.
உப்புப் படுகை
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டுக்கு 3 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். சாலர் டி உயினி உப்புப் படுகையைப் பார்வையிட நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் செல்லும் வரை தங்கி ஓய்வெடுக்க தங்கும் விடுதி இல்லாமல் இருந்த நிலையில்,
உப்புப் பாளங்களைக் கொண்டு ஒரு விடுதியைக் கட்டலாம் என்ற முடிவு செய்யப்பட்டு 1993 முதல் 1995 வரையிலான காலத்தில் மாளிகை கட்டப்பட்டது. தொடர்ந்து, 12 இரட்டைப் படுக்கையறைகளுடன் ஒரு பொதுவான குளியலறையைக் கொண்டு கட்டப்பட்ட இந்த விடுதியும் சுற்றுலாத்தலமானது.
இம்மாளிகையின் தரை, சுவர், கூரை, கட்டில், மேசை, இருக்கை மற்றும் அறைகலன்கள் என அனைத்தும் உப்பால் செய்யப்பட்டவை. நீராவிக் குளியலறை, நீர்ச்சுழல் குளியலறை, நீச்சல் குளம் என்று அனைத்தும் உப்புப் பாளங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.