ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்த எதிர்கட்சித் தலைவர் மர்ம மரணம் - சிறையில் நடந்தது என்ன..?
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்துள்ளார்.
அலெக்ஸி நவல்னி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக எதிர்த்தது வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி. இவர் புதினின் சொத்து மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை, சொகுசு பங்களா என அனைத்தையும் ஆதாரத்துடன் வீடியோவாக வெளியிட்டு கடுமையாக விமர்சித்து வந்தார்.
இவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்ததையடுத்து, கடந்த 2021 முதல் ஆர்க்டிக் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் சிறையில் வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சி சென்ற நவல்னி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக பெடரல் சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பலன் இல்லை
இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அலெக்ஸி நவல்னி சிறையில் வழக்கம் போல நடைப்பயிற்சி சென்று வந்தார். அப்போது திடீரென அவர் சுயநினைவை இழந்தார்.
இதையடுத்து சிறையில் உள்ள மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அவரை பரிசோதனை செய்தனர். மேலும், ஆம்புலன்ஸ் கூட சம்பவ இடத்திற்கு விரைந்தது. அவரை காப்பாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பலன் இல்லை.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. புதினை கடுமையாக எதிர்த்து வந்தவர் திடீரென சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.