ரஷ்ய வீரர்களை உற்சாகப்படுத்திய நடிகை; உக்ரைன் வீசிய ராக்கெட் - மேடையில் நேர்ந்த சோகம்!
உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ரஷ்ய நடிகை உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் தாக்குதல்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஆண்டு தொடங்கியது. ஒன்றரை ஆண்டுகளாக இந்த போரானது தொடர்ந்து வருகிறது. பல காலமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், திடீரென கடந்தாண்டு முழு வீச்சில் போரை ஆரம்பித்தது.
இதில் ரஷ்யா ராணுவம் கிழக்கு உக்ரைன் பகுதியை கைப்பற்றியது. இந்நிலையில் அந்த பகுதிக்கு உட்பட்ட டான்பாஸ் என்ற பகுதியில் ரஷ்ய நடிகையான 'போலினா மென்ஷிக்' (40) வீரர்களை, லைவ் ஷோ நடத்தி உற்சாகப் படுத்திக்கொண்டிருந்தார்.
நடிகை பலி
அவர் மேடையில் கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தபோது, உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மேடையிலேயே பலியானார். இதனை ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு தரப்பினரும் உறுதி செய்தனர்.
இது தொடர்பாக உக்ரைனின் ராணுவ தளபதி ராபர்ட் புரோவ்தி சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில் "இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.