ரஷ்யா-உக்ரைன் போர் தற்போதைய நிலவரம் - அமைதியை நிலைநாட்ட இராணுவ கட்டுபாட்டிற்குள் வந்தது உக்ரைன்
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து உக்ரைனின் 3 எல்லைகளிலும் சுற்றிவளைத்து 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது ரஷ்யா.
உக்ரைன் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதலை தொடங்கி நடத்திவருகிறது.
மேலும், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அதிபர் புதின் பிற நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும்; இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இந்நிலையில், காலை முதல் தாக்குதலை நடத்திவரும் ரஷ்யா உக்ரைனில் உள்ள வான் பாதுகாப்பு அரணை கைப்பற்றி விட்டதாக அறிவித்தது.
உக்ரைனில் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு சொந்தமான 2 நகரங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
ரஷ்யாவின் தாக்குதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்தது.
ரஷ்யா தனது போரை நிறுத்தவில்லை என்றால் கனடா நடவடிக்கை எடுக்கும் எனவும் உக்ரைனுக்கு ஆதரவாக கனடா துணை நிற்கும் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யப் படைகள் உக்ரைனில் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து உக்ரைன் மக்கள் கிவ் பகுதியை விட்டு வெளியேறி வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது பல மணி நேரமாக தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்க தொடங்கியதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் உணவிற்காகவும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காகவும் அங்குமிங்கும் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
உக்ரைன் நாட்டில் உள்ள க்மெல்னிட்ஸ்கி, கிராமடோர்ஸ்க், நிசின் பகுதியில் உள்ள விமான தளங்கள் மீதும் ஒச்சாகிவ் துறைமுகத்தில் உள்ள கடற்படை தளம் மீதும் ரஷ்யா துப்பாக்கி சூடு மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
இவானோ - ஃபிராங்கிவ்ஸ்க் விமான நிலையம் மற்றும் எரிபொருள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீதும் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்திய மாணவர்களை மீட்க உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் போர் நடப்பதால் பாதிவழியில் திருப்பிவிடப்பட்டதால் உக்ரைனிலுள்ள இந்திய துாதரக வளாகத்தில் மாணவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட இராணுவச் சட்டம் இயற்றப்பட்டு இன்று முதல் 30 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை ஆலோசனை. உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் வழிமுறைகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவங்களை தொடர்ந்து, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைனுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு அனைத்து நட்பு நாடுகளின் வலுவான ஆதரவு இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட வரிசைகளில் ரஷ்ய ராணுவ டாங்குகள் உக்ரைனின் க்ராஸ்னா தலிவ்கா, மிலோவ் மற்றும் ஹொரோடிஷ்சே இராணுவ பகுதிகளில் நுழைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரேனிய இராணுவம் ஷ்சாஸ்டியா நகரத்தின் மீதான தாக்குதலை முறியடித்து, 50 ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றதாகவும் அறிவித்தது.