எப்புட்றா.. வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.756 கோடி - அதிர்ச்சியில் ஆடிப்போன இளைஞர்!
இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கவுண்ட் பேலன்ஸ்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அடுத்த வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 29 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது, இவர் தனது நண்பர் ஒருவருக்கு செயலி மூலமாக ரூ. 1000 அனுப்பியுள்ளார்.
ஆனால் அது நண்பரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படாமல், இவரது வங்கிக் கணக்குக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளது. அதன்பிறகு இவரது செல்போனுக்கு வந்த வங்கியின் குறுஞ்செய்தியில், வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை ரூ.756 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது.
இளைஞர் அதிர்ச்சி
இந்நிலையில், அதிர்ச்சியடைந்த இளைஞர், நேற்று காலை வங்கிக் கிளைக்கு சென்று இது குறித்து கூறியுள்ளார். வங்கி ஊழியர்கள் இது குறித்து விசாரிப்பதாக கூறினர். சற்று நேரம் கழித்து வங்கிக் கணக்கில் இருப்புத் தொகையை சரிபார்த்தபோது, ரூ.756 கோடி என காட்டாமல், அவரது சேமிப்புத் தொகையை மட்டும் காட்டியது.
இது குறித்து வங்கியின் நிர்வாகம், "மும்பையில் உள்ள எங்கள் அலுவலகத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம். உரிய விசாரணைக்கு பிறகு, இதில் ஏற்பட்ட தவறு குறித்து தெரியவரும்" என்று கூறியுள்ளனர்.