ரூ.4 கோடி விவகாரம்; எனக்கு எந்த சம்மனும் வரல - நயினார் நாகேந்திரன் ஆவேசம்!
நயினார் நாகேந்திரனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நயினார் நாகேந்திரன்
சென்னை எழும்பூரில் புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில், நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் ரூ.1.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
போலீஸார் சம்மன்
இதனைத் தொடர்ந்து, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க முடிவு செய்து தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், சம்மன் தொடர்பாக எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை.
அமைச்சர் துரைமுருகன் தொடர்புடையவர்கள் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்துள்ளனர். அவர்களுக்கு சம்மன் அனுப்பவில்லை. தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கும் சம்மன் அனுப்பவில்லை.
இந்த சோதனைகளால் எனக்கு எந்த மனஅழுத்தமும் இல்லை. ஒருதலைபட்சமாக தொடர்ந்து சோதனை நடத்துவதால், எங்களால் முறையாகப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.