கரடிகளை அழிக்க சட்டம் நிறைவேற்றிய நாடாளுமன்றம்; வலுக்கும் எதிர்ப்பு - என்ன காரணம்?
481 கரடிகளை அழிக்க அங்கீகாரமளிக்கும் சட்டம் ருமேனியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
481 கரடிகள்
ருமேனியாவில் உள்ள கார்பாத்தியன் மலைப் பாதையில் 19 வயது பெண் சுற்றுலாப் பயணி கரடியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பான செய்திகள் வேகமாக பரவியதை அடுத்து, அந்நாட்டு பிரதமர் மார்செல் சியோலாகு நாடாளுமன்ற அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
அந்த கூட்டத்தில், ருமேனிய ப்ரவுன் கரடி, அல்லது உருசஸ் ஆர்க்டோஸ் என்று அழைக்கப்படும் கரடிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் 481 கரடிகளை அழிக்க அங்கீகாரமளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்ப்புக் குரல்
இந்த வகையான அழித்தல் என்பது மனித மக்கள்தொகைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விலங்குகளை தேர்ந்தெடுத்து கொல்வதாகும். முன்னதாக, கடந்த 20 ஆண்டுகளில் 26 பேர் கரடிகள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 274 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ருமேனிய அரசு தெரிவித்திருந்தது.
இதனால், கடந்த ஆண்டில் 220 கரடிகளை அழிக்க அனுமதிக்கப்பட்டதை விட, இந்த ஆண்டில் 481 கரடிகளை அழிக்க அரசு முடிவெடுத்துள்ளது. ருமேனிய அரசின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதுமுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகின்றனர்.