உறுதியா இருக்கேன்.. ஓய்வு பெறப்போகும் நேரம் இதுதான் - மனம் திறந்த ரோஹித் ஷர்மா!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தனது ஒய்வு முடிவு குறித்து பேசியுள்ளார்.
ரோஹித் ஷர்மா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார். இந்த வருடம் அவர் சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.
தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் ரசிகர்களுக்கு உடன்பாடில்லை.
இதனால் பாண்ட்யா எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் அதிருப்தி ஒளியை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ரோஹித் ஷர்மா தனது ஒய்வு முடிவு குறித்து பேசியுள்ளார்.
ஒய்வு எப்போது?
அவர் கூறியதாவது "இன்னும் 2 முதல் 3 வருடங்கள் வரை நான் நிச்சயம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன். என்னைப் பொறுத்தவரையில் ஐபிஎல் முடிந்தவுடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிறது.
அதனை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய தலையாய இலக்கு. அதன் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது. அதனையும் கட்டாயம் இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அதனால் இப்போதைக்கு ஓய்வு பெறுவது குறித்து சிந்திக்கவே இல்லை. என்னுடைய கிரிக்கெட்டை இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.