முக்கிய சட்ட மசோதாக்கள்; உடனே ஒப்புதல் அளித்த ஆளுநர் - என்ன விசயம்?
தமிழக அரசு புதிதாக கொண்டுவந்த 4 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்ட மசோதா
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு சட்ட திருத்த மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. இதில் மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதற்கான வரம்பு குறைக்கப்பட்ட உள்ளாட்சி திருத்த சட்ட மசோதா, சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல் உட்பட 4 சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, காரைக்குடி, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் அதற்கு நகர்புற உள்ளாட்சி சட்டத்தில் இருந்த வருமான மற்றும் மக்கள் தொகை வரம்பு தடையாக இருந்தது.
மாநகர காவல் சட்டம்
மேலும், ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அந்த பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்ட விஷயங்களை மாற்றம் செய்யவும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், சென்னையில் நடைமுறையில் உள்ள மாநகர காவல் சட்டத்தை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆளுநர் ஒப்புதல்
மேலும், ஒரு தனியார் வளாகம் அல்லது கடைக்கு 30 மீட்டர் தொலைவில் கழிவு நீர் பாதை இருந்தால், அந்த கடை அல்லது வளாகத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் கழிவுநீரை கழிவுநீர்ப்பாதையில் வெளியேற்றுவதற்காக இணைப்பு பெறுவதைக் கட்டாயமாக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரிய விதிகளில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 4 மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த 4 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த 4 மசோதாக்களும் அரசிதழில் வெளியிடப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளளது.