லஞ்சமே வாங்கலனு ஒருத்தர் சொல்லுங்க காலுல விழுறேன் - ஊழியர்களை மிரளவிட்ட அதிகாரி!
லஞ்சம் வாங்குவதில் முதலிடம் வருவாய்துறை தான் என்பது தெரியவந்துள்ளது.
ஊழல் தடுப்பு
திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் தமிழரசி கலந்துகொண்டார். அப்போது, ஊழலில் முதல் இடத்தில் உள்ள துறை எது என சொல்லுங்கள் என ஊழியர்களிடம் கேட்டார்.
ஆய்வாளர் பேச்சு
இதற்கு, ரிஜிஸ்டர் ஆபீஸ், ஆர்.டி.ஓ எனத் தெரிவித்தனர். தொடர்ந்து ஆய்வாளர் தமிழரசி, “இத்தனை வருட பணியில் நான் லஞ்சம் வாங்கவில்லை என ஒருவர் தெரிவியுங்கள். நான் உங்கள் காலில் விழுகிறேன்” என்று கூறினார்.
அதற்கு நகராட்சி ஊழியர்கள் முதல் அலுவலர்கள் வரை யாருமே நான் லஞ்சம் வாங்கியதில்லை என சொல்லவில்லை. மேலும், லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால் நீங்களும் உங்களது குடும்பமும் உங்களை சார்ந்தவர்களும் செழிப்பாக இருப்பார்கள்.
அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டால் வீட்டில் கொடுக்கப்பட்ட மரியாதை, வெளியில் கிடைத்த மரியாதை என அத்தனையும் தலைகீழாக மாறிவிடும்.
அடிப்படைத் தேவைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் அரசு அலுவலகங்களை நோக்கி வரும் மக்களுக்கு அவர்களது தேவைகளை மரியாதை அளித்து பூர்த்தி செய்தால் எந்த அவப்பெயரும் பிரச்சனையும் வராது எனத் தெரிவித்துள்ளார்.