முதியவர்களை மிரட்டி லஞ்சம் வாங்கிய வங்கி காசாளர் - வைரலாகும் வீடியோ!
உதவித்தொகை பெறுவதற்கு வந்த முதியவர்களிடம் வங்கி காசாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உதவி தொகை
தமிழகத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தமிழக அரசு முதியோர் உதவி தொகை வழங்கி வருகிறது. இந்த மாதாந்திர உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அதன்படி சேலம் மாநகர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு அருகே உள்ள சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
லஞ்சம்
இந்த நிலையில் வங்கியில் காசாளராக பணியாற்றும் உஷா என்பவர் முதியோர்களின் தொகையை அவர்களிடம் எடுத்து தருவதற்காக தொடர்ந்து அனைவரிடமும் 50 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். அங்கு, தனது உதவித்தொகையை வாங்க வந்திருந்த பெண் ஒருவர் 20ரூ கொடுத்துள்ளார்.
அதற்கு அவர், " என்ன இது? மீதி 30ரூ தாங்க. போன மாதமும் இதே தான் செஞ்சீங்க, இந்த மாதமும் 20ரூ தான் தரீங்க" என ஆதங்கத்துடன் கேட்பதுடன், மற்ற பயனாளர்களிடம் அவர் பணம் பெரும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனை அப்பகுதி வாலிபர் ஒருவர் பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.