போன் எடுக்கல, பதறிய மகள்.. தலைமையாசிரியர் தம்பதி மர்மக் கொலை - அதிர்ச்சி!
விழுப்புரத்தில் தலைமையாசிரியர் தம்பதி மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதறிய மகள்
விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் உள்ள கே.எம்.ஆர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜன் - உமா தேவி தம்பதி. இவர்கள் இருவரும் தனித்தனி அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்களுடைய மகன் ராஜராஜசோழன் பெங்களூரிலும், மகள் பத்மா புதுச்சேரியிலும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.
அவர்களது மகள் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் அவரது பெற்றோருக்கு தொடர்பு கொண்டார், அப்பொழுது யாரும் எடுக்கவில்லை. பின்னர் மீண்டும் மாலை 6 மணியளவில் முயன்றபோது, சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அவர் இவர்களுக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் விஜயராணி என்பவரைத் தொடர்புகொண்டு பார்க்க சொன்னார்.
மர்ம மரணம்
இந்நிலையில், அவர் பார்த்தபொழுது, வீடு பூட்டப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, ஜன்னல் வழியாகப் பார்த்தபோது ராஜன் - உமா தேவி ஆகிய இருவரும், தனித்தனி அறையில் உயிரிழந்துகிடப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.
மேலும், விசாரணையில், ராஜன் ஓர் அறையில் பெட்ஷீட் துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துகிடந்ததாகவும், உமா தேவி மற்றோர் அறையில் முகத்தில் காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துகிடந்ததாகவும், உமா தேவி அணிந்திருந்த சுமார் 4.25 பவுன் திருடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.