எளிய முறையில் நடந்த அதானியின் மகன் திருமணம் - பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
பிரபல தொழிலதிபர் அதானியின் மகன் ஜீத் அதானியின் திருமணம் எளிய முறையில் நடைபெற்றுள்ளது.
ஆனந்த் அம்பானி திருமணம்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு உலகம் முழுவதும் இருந்தும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டுத்துறையினர் என பலரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டி உலகமே வியக்கும் அளவுக்கு இந்த திருமணத்தை அம்பானி நடத்தினார்.
ஜீத் அதானி திருமணம்
இதே போல் இந்தியாவில் அம்பானிக்கு அடுத்தளவில் உள்ள தொழிலதிபரான கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அம்பானி போல் அதானியும் தனது மகன் திருமணத்திற்கு VVIP க்களை அழைத்து பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து திருமணம் நடத்த உள்ளார் என தகவல் வெளியானது.
ஆனால் ஜீத் அதானி - திவா ஜெய்மின் ஷா திருமணம் இன்று(07.02.2025) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அதானியின் சாந்திகிராம் நகரில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் குஜராத்தி மற்றும் ஜெயின் முறைப்படி எளிமையாக நடைபெற்றது.
மணப்பெண் திவா ஜெய்மின் ஷா, பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் ஆவார். 27 வயதான ஜீத் அதானி 2019 ஆம் அதானி குழுமத்தில் இணைந்தார். ஜீத் அதானி அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
மாற்று திறனாளிகளுக்கு நன்கொடை
மகா கும்பமேளாவின் போது திரிவேணி சங்கமத்தில் தனது குடும்பத்தினருடன் வழிபட்ட பிறகு பேசிய கவுதம் அதானி, ”எனது வளர்ப்பும், தொழில் முறையும் முற்றிலும் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தது. ஜீத்தும் என்னுடன் இருக்கிறார். திருமணம் மிகவும் எளிமையான, பாரம்பரிய முறையில் ஏற்பாடு செய்யப்படும்” என கூறினார்.
ஜீத் அதானி - திவா ஜெய்மின் ஷா தம்பதியினர் ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க முடிவெடுத்துள்ளதாக கெளதம் அதானி தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக 21 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளனர்.
परमपिता परमेश्वर के आशीर्वाद से जीत और दिवा आज विवाह के पवित्र बंधन में बंध गए।
— Gautam Adani (@gautam_adani) February 7, 2025
यह विवाह आज अहमदाबाद में प्रियजनों के बीच पारंपरिक रीति रिवाजों और शुभ मंगल भाव के साथ संपन्न हुआ।
यह एक छोटा और अत्यंत निजी समारोह था, इसलिए हम चाह कर भी सभी शुभचिंतकों को आमंत्रित नहीं कर सके,… pic.twitter.com/RKxpE5zUvs
மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டும் ஜீத் அதானி தனது திருமணத்திற்கு தேவையான சால்வைகளை உருவாக்க NGO Family of Disabled (FOD) எனப்படும் மாற்று திறனாளிகளால் நடத்தப்படும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.