பணக்காரர் பட்டியல்; அம்பானியை முந்திய அதானி - 3 வது இடத்தில் உள்ள தமிழர் யார்?
இந்தியாவில் கடந்த ஆண்டு 5 நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவானதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கௌதம் அதானி
ஹுருன் இந்தியா அமைப்பு இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார்.
ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கௌதம் அதானி குடும்பம் முதல் இடத்தை பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானி குடும்பம், ரூ.10.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளனர்.
ஷிவ் நாடார்
இந்த பட்டியலில் HCL நிறுவனர் ஷிவ் நாடார் 3 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். ஷிவ் நாடார் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இதனையடுத்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனர் சைரஸ் எஸ். பூனாவாலா மற்றும் குடும்பம் 4 வது இடத்தையும், சன் ஃபார்மா இண்டஸ்ட்ரீஸின் திலீப் சாங்வி 5வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக 6 நபர்கள் தொடர்ந்து இந்தியாவின் டாப் 10 இடத்தில் இருந்துள்ளனர். கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, சிவ் நாடார், சைரஸ் எஸ். பூனாவாலா, கோபிசந்த் ஹிந்துஜா, ராதாகிருஷ்ணன் தாமணி ஆகியோர் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்.
2024 ஹூரன் இந்தியா பணக்காரர் பட்டியலில் இளம் பில்லியனராக 21 வயதான ஜெப்டோ நிறுவனத்தின் கைவல்ய வோரா இணைந்துள்ளார். இந்த பட்டியலில் முதல் முறையாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைந்துள்ளார்.
334 பில்லியனர்ஸ்
சீனா தங்களது நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 25% சரிவைக் கண்டுள்ளநேரத்தில் இந்தியா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 29% அதிகரித்து உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 334 பேர் 1000 கோடிக்கு அதிகமாக சொத்துக்களை வைத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 5 நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவானதாக ஹூரன் ஆய்வுகள் தெரிவிக்கிறது.