அதானி குழும முறைகேட்டில் SEBI தலைவருக்கு தொடர்பு? ஹிண்டன்பர்க் அறிக்கையால் பரபரப்பு
அதானி குழும முறைகேட்டில் செபி தலைவருக்கு தொடர்பு உள்ளது என ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க்
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் உலக அளவில் பெரு நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்கிறது.
2023 ம் ஆண்டு ஜனவரி மாதம், அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி, அதன் மூலம் அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரிவித்தது. இந்த அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழும பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.
அதானி குழுமம்
ஹிண்டன்பர்க்கின் அறிக்கையில் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுத்தது. இதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க், அறிக்கையின் முடிவில் 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அதானி குழுமம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக இருக்கிறோம் என அறிவித்தது.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன், ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் பக்கத்தில், “Something big soon India” என பதிவிட்டது அடுத்து என்ன முறைகேடு வெளியாக உள்ளது சிக்க போவது யார் என பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
மாதபி புச்
இந்நிலையில், தற்போது ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்(SEBI) தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சும், அதானியின் சகோதரருமான வினோத் அதானி முறைகேட்டிற்கு பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை செபி மீது ஹிண்டன்பர்க் வைத்துள்ளது. மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாலே அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள செபி தலைவர் மாதபி புச், "ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. எங்கள் வாழ்க்கை மற்றும் நிதி ஒரு திறந்த புத்தகம். தேவையான அனைத்து வெளிப்பாடுகளும் ஏற்கனவே SEBI க்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு மற்றும் அனைத்து நிதி ஆவணங்களையும் வெளியிடுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. முழுமையான வெளிப்படைத்தன்மையின் நலன் கருதி, உரிய நேரத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவோம்" என கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள்
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், செபி தலைவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் அவரும், அவருடைய கணவரும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் இன்டர்போலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்" என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ளார்.
`2022-ல் மாதபி பச் செபியின் தலைவராகப் பொறுப்பேற்றவுடன், கௌதம் அதானியைச் சந்தித்துப் பேசியிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது. அந்த நேரத்தில், அதானி பரிவர்த்தனைகளை செபி விசாரித்ததாகக் கூறப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஏன் முன்னதாகவே ஒத்தி வைக்கப்பட்டது என தற்போது புரிகிறது என்று காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Here is our statement on the latest Hindenberg revelations
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 10, 2024
Quis Custodiet Ipsos
Custodies pic.twitter.com/D1wGN2uJop
இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் தலைவர் மீதே இத்தகைய குற்றச்சாட்டு வந்திருக்கும் நிலையில் இது பங்கு சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.