அண்ணாமலை தோல்வி - அதிமுக தான் காரணமா?
கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார்.
அண்ணாமலை
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். ஆக பணியாற்றி வந்தார். 2019 ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, 2020 ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். சில மாதங்களிலேயே கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 24,816 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர். இளங்கோவிடம் தோல்வியடைந்தார். தொடர்ந்து, ‘என் மண், என் மக்கள்’ யாநடைபயணம் மூலம் தமிழகம் முழுவதும் மக்களை சந்திதது ஆதரவு திரட்டினார். மேலும், இவரை ஆதரித்து பிரதமர் மோடி மேற்கொண்ட பிரம்மாண்ட வாகனப் பேரணி, மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளிர் யாத்திரை போன்றவை அவருக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நம்பப்பட்டது.
கோவை தொகுதி
கோவை தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை. பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் கோவை பாஜவுக்கு வாய்ப்புள்ள தொகுதியாகவே பார்க்கப்பட்டது. 1998, 1999 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக இங்கு வெற்றி பெற்றுள்ளது.
தற்போது அங்கு திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் களம் கண்டனர்.
தமிழ்நாடு தாண்டி இந்திய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, 4 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற நிலையிலும், கோவை தொகுதியில் 2 ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து மட்டம் பிரியாணி வழங்கி கோவை திமுகவினர், அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடினர்.
தமிழக அரசின் நலத்திட்டம்
இதுகுறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: தமிழக அரசின் விலையில்லா பேருந்துப் பயணத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை ஆகியவை இந்த தேர்தலில் திமுகவுக்கு கை கொடுத்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக விலகி தனியே நின்றது, அண்ணாமலையின் தோல்விக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. கோவை தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் மொத்த வாக்குகள் திமுகவுக்கு சென்றுள்ளது. ஊரகப் பகுதியில் திமுகவுக்கு நல்ல வாக்குகள் கிடைத்துள்ளது.