கோவையில் வரலாறு படைப்பாரா அண்ணாமலை? அதிர்ச்சி அளிக்கும் எக்ஸிட் போல்
2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
எக்ஸிட் போல்.
2024 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை உள்ள நிலையில் தேர்தல் முடிந்த பின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று 3 வது முறையாக மோடியே பிரதமர் ஆவார் என்றே கணித்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என கணித்துள்ளன.
அண்ணாமலை
கோயம்புத்தூர் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். தனது ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு 2020 ல் பாஜகவில் சேர்ந்த அண்ணாமலை சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 24,816 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர். இளங்கோவிடம் தோல்வியடைந்தார்.
அண்ணாமலை போட்டியிடுவதால் கோயம்புத்தூர் ஸ்டார் தொகுதியாக மாறி உள்ளது. தேர்தலுக்கு சில மாதம் முன்பு மாநிலம் முழுவதும் நடை பயணம் சென்று மக்களை சந்தித்தார்.அண்ணாமலை தலைவராக வந்த பின்பு பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளதாக அக்கட்சியினர் கூறி வரும் நிலையில், இந்த தேர்தல் வெற்றி பெற்று தன் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய முக்கிய தேர்தலாக அமைந்துள்ளது.
களத்தில்
இங்கு திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் அண்ணாமலை வெற்றிபெறுவார் என்று பாஜகவினர் கூறிவரும் நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் வந்துள்ளன.
இந்நிலையில் தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 31.5% வாக்குகளை பெறுவார் என்றும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரன் 31 % வாக்குகளை பெறுவார் என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 30.5% வாக்குகளை பெறுவார் என்றும் கணித்து உள்ளது. அண்ணாமலை 3ம் இடம் பெறுவார் என்ற கருத்து கணிப்பு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பி ஆர் நடராஜன் இங்கே 571,150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.