மீண்டும் CSK ல் இணைந்த அஸ்வின் - தோனிக்கு அடுத்த பதவியை கொடுத்த நிர்வாகம்
மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த அஸ்வின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
2022 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பொறுப்பு ஒன்றை ஏற்று இருக்கிறார். தற்போது ஐபிஎல் ஏலம் எதுவும் நடைபெறாத நிலையிலும், அவர் அணியின் நிர்வாகத்திற்குள் இணைந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை புற நகரில் உயர் செயல்திறன் மையம் ஒன்றை திறக்க உள்ளது. 2025 ஐபிஎல் தொடருக்கு முன் திறக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு தான் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என கூறப்படுகிறது. அந்த மையத்தின் தலைமை பொறுப்பை அஸ்வின் ஏற்றுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
அங்கு பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஆலோசனை சொல்வது, என்ன மாதிரியான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என முடிவு செய்யும் பொறுப்பை அளித்து இருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கட்டுப்பாடு எப்படி தோனியிடம் உள்ளதோ , அதே போல இந்த மையத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அஸ்வினிடமே இருக்கும்.
இதை தொடர்ந்து 2025 ஐபிஎல் க்கான ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்படுவார் என கூறப்படுகிறது. இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தெரிவித்ததாவது "அஸ்வின் இப்போது உயர் செயல் திறன் மையத்தின் தலைமை பொறுப்ப்பை ஏற்கிறார். அதன் அனைத்து செயல்பாடுகளையும் அவரே கவனிப்பார். அவரை நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
ஆனால் அஸ்வினை ஏலத்தில் வாங்குவது என்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஏலத்தின் தன்மையை பொறுத்து அன்று என்ன வாய்ப்பு உள்ளதோ அதை பொறுத்து முடிவு செய்வோம்.. தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி ஆவார். அவர் இந்தியா சிமெண்ட்ஸ் அணியான டிஎன்சிஏ முதல் டிவிசன் அணிக்காக விளையாடுவார்" என தெரிவித்தார்.
அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் ஆடத் துவங்கிய காலத்தில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கிரிக்கெட் அணியில் இணைந்து ஆடி வந்தார். அதன் பின்னர் 2008 ல் தொடங்கிய முதல் ஐபிஎல் தொடரில் இருந்து 2015 வரை சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்தார். தற்பொழுது மீண்டும் சிஎஸ்கே ல் இணைந்துள்ளார்.