தோனியை புகழ்ந்து தள்ளும் அஸ்வின் காரணம் என்ன?
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் தான் தமிழகத்தை சேர்ந்த நம்ம அஸ்வின்.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி புகழ் பெற்று, பின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அஸ்வின் தனது இருண்ட கால பக்கங்கள் குறித்து இணையத்தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அதில் 2018-19ஆம் ஆண்டு காயத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறினார்.
காயத்திலிருந்து குணமடைந்துவிடுவேன் ஆனால் எப்படி, எப்போது என்று தெரியவில்லை என்று புலம்பினேன் என்று அஸ்வின் கூறினார்.
அப்போது தோனி சொன்ன வார்த்தைகள் தான் தம்மை மீட்டதாக அஸ்வின் தெரிவித்தார். பயிற்சியை மட்டும் விட்டுவிடாதீர்கள்,
முடிவை எதிர்பார்க்காமல் தொடர்ந்து பயிற்சி செய்தால், எல்லாம் சரியாக நடக்கும் என்று தோனி கூறியது தான் நினைவுக்கு வந்ததாகவும்,
அதனை வைத்து காயத்திலிருந்து மீள்வதற்கான பணிகளை மட்டும் செய்தேன் என்றார். ஐ.பி.எல். தொடரில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாடினால் மகிழ்ச்சி என்றும் அஸ்வின் விருப்பம் தெரிவித்தார்.
அஸ்வினின் பேச்சில் உண்மை இருக்கிறது. எனினும் ஐ.பி.எல். ஏலம் நெருங்கும் நிலையில், தோனியை புகழ்ந்து அஸ்வின் பேசியதால்,
அவர் சென்னை அணிக்கு திரும்பும் முயற்சியை எடுத்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஐ.சி.சி. சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின்,
எனது வெற்றிக்கு காரணம் கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவும் தான் என்றார். அப்போது தோனியை குறித்து அஸ்வின் ஒரு வார்த்தையை கூட குறிப்பிடவில்லை.
தற்போது தோனியை புகழ்ந்து பேசியதால் அஸ்வினின் இந்த திடீர் மனம் மாற்றம் ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.