பேரணிக்கு செல்லவில்லையா..அமித் ஷாவை கேலி செய்த அஸ்வின்? வைரலாகும் பதிவு!
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் போலி டிவிட்டர் கணக்குக்கு அளித்த பதில் வைரலாகி வருகிறது.
அஸ்வின்
நடப்பாண்டு ஐபிஎஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில் முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் உடனே விற்கப்பட்டதால் ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், “ஐபிஎல் தொடரின் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் கிடைக்கவில்லை.
எனது மகள்கள் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சிகள் மற்றும் முதல் போட்டியை நேரில் காண விரும்புகின்றனர். தயவு செய்து உதவி செய்யுங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
கேலி செய்தாரா?
இதற்கு, நடிகை ஜான்வி கபூரின் போலி எக்ஸ் கணக்கிலிருந்து ஒருவர், “ சென்னை, பெங்களூரு போட்டியைக் காண பாக்ஸ் டிக்கெட் வழங்கியதற்கு நன்றி அஸ்வின் சார். தல மற்றும் கிங்கைக் காண ஆவலுடன் இருக்கிறேன்” என தெரிவித்தார்.
திரும்ப பதிலளித்த அஷ்வின், “உங்களுக்காக என்னால் செய்ய முடிந்தது. சரி, அந்த டிக்கெட்களை எனக்குத் திருப்பி அனுப்ப முடியுமா?” என்றார்.
அமித் ஷா பதிவு அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் போலி கணக்கிலிருந்து, “ நானும் வரிசையில் இருக்கிறேன் அண்ணா” ஒருவர் கூரினார். இதற்கு அஸ்வின், “சார். கேரளத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பேரணிக்கு நீங்கள் செல்லவில்லையா? நான் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.” எனக் கேலி செய்தார்.
வைரலாகும் பதிவு
அதற்கு அப்போலி கணக்கிலிருந்து, “இல்லை அண்ணா. மோடி பேரணியில் பரபரப்பாக இருப்பதால் பிரதமர் அலுவலகத்தை நான்தான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எப்போதும் என்னைச் சந்திக்க வரலாம்” என்று பதிவிட்டார்.
மீண்டும் பதிலளித்த அஸ்வின், “சரி சார். எங்கே, எப்போது என முடிவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளவும்” என்று குறிப்பிட்டிருந்தார். நடிகை ஜான்வி கபூர், அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் போலி கணக்குகளுக்கு அஸ்வின் பதிலளித்தது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷாவையே, அஸ்வின் கிண்டலடித்து பேசினாரா என்ற கேள்வியும் எழத்தொடங்கியது.