தேர்தல் பாத்திரங்கள் ரத்து: தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் - பாஜக சொல்வது என்ன..?
தேர்தல் பாத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக மதிக்கிறது என்று பாஜக தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாத்திரங்கள் திட்டம்
பாஜக அரசால் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பாத்திரங்கள் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர் எனப் பலரும் எளிதாக நிதியளிப்பதற்காக கொண்டுவரப்பட்டது.
மேலும், இதன் மூலம் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுத்துள்ளனர் என்பதை ரகசியமாக வைத்திருக்கும் வகையிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுகுறித்து குடி மக்கள் தகவல் பெற முடியாத வகையிலும் பா.ஜ.க அரசு தேர்தல் பாத்திரங்கள் திட்டத்தை வகுத்திருந்தது.
இந்த திட்டத்தை எதிர்த்தது உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் சட்டத்துக்கு முரணானது. தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (a)-க்கு எதிரானது. எனவே இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது" என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பை பாஜக மதிக்கிறது
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் "தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை பா.ஜ.க மதிக்கிறது.
ஆனால், இந்தத் திட்டம் தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான தீர்ப்பு நூற்றுக்கணக்கான பக்கங்கள் இருக்கின்றன. எனவே, இதுதொடர்பான விளக்கமளிக்கும் முன்பு விரிவான ஆய்வு தேவைப்படும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேர்தல் நிதியைச் சீர்திருத்தும் முயற்சிகளை மேற்கொண்டது.
தேர்தல் பத்திரங்கள் அறிமுகமும் அதன் ஒரு பகுதிதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆளும் பா.ஜ.க அரசுக்கு லஞ்சம் வழங்க இந்த தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஊழல் மற்றும் லஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் அத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். .