ஜம்மு காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம் - திடீர் ஆலோசனையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
ராஜ்நாத் சிங்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.கதுவாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீதும்,தோடா மற்றும் உதம்பூரில் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை 21-ம் தேதி வரை நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
கடந்த மாதம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர். இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அனந்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பயங்கரவாத தாக்குதல்
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் , தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்புப் படைத் தலைவர், ராணுவத் தலைமைத் தலைவர், ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.