கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த..மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்த முடிவு!
புதுச்சேரியில் கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் நிறுத்தும் தளத்தை (ஹேங்கர்) ஆகஸ்ட் 18-ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.
புதுச்சேரி
இந்திய முப்படைகளின் ஒன்றான கடலோர காவல்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் புதுச்சேரி கடலோர காவல்படை இந்திய கடலோர எல்லை பகுதியில் நவீன கப்பல்கள், விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, புதுச்சேரி கடலோர காவல்படை மூலம் நான்கு ரோந்து படகுகள் , 20 அடி நீளம் கொண்ட இரண்டு படகுகள், நீர்முழுங்கி கப்பல்கள் கொண்டு மரக்காணம் முதல் கோடியக்கரை வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் மத்திய அரசு, கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த விதமாக, புதுச்சேரி கடலோர காவல்படைக்கு நவீன ஹெலிகாப்டர்களை வழங்கி கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும், புயல் மழை காலங்களில் மீட்பு பணிகளில் அவற்றை ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளது.
கடலோர காவல்படை
இதற்காக புதுச்சேரி விமான நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் நிறுத்தும் தளத்தை (ஹேங்கர்) அமைக்க மத்திய அரசு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வலியுறுத்தியிருந்தது.
இதையடுத்து, புதிய விமான நிலையத்தின் டெர்மினல் கட்டிடத்திற்கு எதிரே ஹெலிகாப்டர் நிறுத்தும் தளத்தை ( டாக்ஸி ட்ராக் உடன் கூடிய ஏர் என்கிளேவை) வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.