கடைசிவரை அம்மாவின் முகத்தை பார்க்கவில்லை - சாந்தன் மறைவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்.
சாந்தன் மறைவு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதில் சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சாந்தன் இலங்கை தமிழர் என்பதால் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
இந்நிலையில் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சாந்தன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனனைக்கு அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில், பிப்ரவரி 23-ம் தேதி சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.