ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல... - இவ்வழக்கின் முன்னாள் சிபிஐ இயக்குனர் பேட்டி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் இருந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவத்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டனர். மேலும், ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்வதாக உத்தரவிட்டனர்.
பேரறிவாளன் விடுதலையை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து இன்று வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இன்று பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சென்னை சத்திய மூர்த்தி பவனில் வாயில் வெள்ளை துணியை கட்டிகொண்டும், கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல என்று இவ்வழக்கின் முன்னாள் தலைமை சிபிஐ விசாரணை அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது -
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எங்கள் குழு எந்த தடயங்களையும் விட்டுவிடாமல், சிறப்பாக விசாரணையை மேற்கொண்டது. ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் எவரும் அப்பாவிகள் கிடையாது.
இச்சம்பவத்தால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் மட்டும் கிடையாது, குண்டுவெடிப்பில் உயிரிழந்த பிற நபர்களின் குடும்பத்தினரும் வேதனையில் உள்ளனர்.
இந்திய நாட்டுக்கே எதிரான குற்றச்செயல். 9 காவலாளர்கள் உள்பட 18 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். எஸ்.பி. இக்பால் தனது பிறந்த நாள் அன்றே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். பிரதமராக தன் கடமையை செய்ததைத் தவிர, ராஜீவ் காந்தி எந்தத் தீங்கும் செய்யவில்லை.
எங்கள் விசாரணையில் எந்தத் தனிப்பட்ட நபரையுமோ அல்லது கட்சியினரையுமோ தலையிட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.