நெல்லை - சென்னை வந்தே பாரத்; உணவில் வண்டு - ரூ.50,000 அபராதம்
உணவில் வண்டு இருந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவில் வண்டு
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் ஒன்று காலையில் புறப்பட்டது. அதில் சி-2 பெட்டியில் பயணித்த ஒருவருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சிக்கு பல கண்டனங்கள் எழுந்தது. இதற்கிடையில் சாம்பாரில் வண்டு இருந்தது குறித்து பயணி புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த பயணியிடம் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டனர்.
நிறுவனத்திற்கு அபராதம்
மேலும், ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அதன்படி, அந்த உணவை விநியோகம் செய்த ஒப்பந்ததாரரான பிருந்தாவன் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே விரிவான விசாரணை நடத்துகிறது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதில் ரயில்வே உறுதியாக உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளனர்.