இனி 16 பெட்டிகள்; சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் - அசத்தல் திட்டம்!
சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - நெல்லை
சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதேநாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.
பின் எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது. இதில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
16 பெட்டிகள்
7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடையும் இந்த ரயில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில்,
இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த ரயிலை 16 பெட்டிகளாக மாற்ற தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.