பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்; அதுதான் பாஜக விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் பேச்சு!
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் விருப்பமாக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெக்ஸஸ் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை மாற வேண்டும். பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை நான் ஆதரிக்கிறேன். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா அமலாவதன் மூலம் இது சாத்தியமாகும். பெண்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஆதரவளிக்க வேண்டும்.
அவர்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும். பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் உணவு சமைத்துக் கொண்டும் அதிகம் பேசாமலும் இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் விரும்புகின்றன. ஆனால் தாங்கள் விரும்பியதை பெண்கள் செய்ய வேண்டும் என்று நாங்கள் (காங்கிரஸ் கட்சி) விரும்புகிறோம்.
பாஜக விருப்பம்
இந்தியா என்பது ஒரே சிந்தனை என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால் இந்தியா என்பது பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போலவே ஒவ்வொருவரும் பங்கேற்பதை நாங்கள் விரும்புகிறோம்.
தங்களின் ஜாதி, மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவரும் கனவுகாண அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு போராட்டமாகும். இந்தியப் பிரதமர் அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறார் என்பதை இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தேர்தலின்போது புரிந்து கொண்டனர்.
இந்திய அரசியலில் அன்பு, மரியாதை, அடக்கம் ஆகியவை காணப்படுவதில்லை. இந்தப் பண்புகளை இந்திய அரசியலுக்குக் கொண்டுவரவே நான் முயற்சிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.